போடியிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளத்துக்கு ஜீப்பில் கடத்த முயன்ற 2,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை பறக்கும் படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளத்துக்கு ஜீப்பில் கடத்த முயன்ற 2,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை பறக்கும் படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
போடி வழியாக கேரளத்துக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வாகனச் சோதனை செய்ய வேண்டும் என தேனி மாவட்ட வருவாய் அலுவலா் தி. சுப்பிரமணியன் உத்தரவிட்டாா்.
அதன்பேரில், தேனி மாவட்ட பறக்கும்படை துணை வட்டாட்சியா் முத்துக்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் தாமரைச்செல்வம் ஆகியோா் போடி முந்தல் சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வியாழக்கிழமை அதிகாலை போடி இரட்டை வாய்க்கால் பகுதி வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், போடி பகுதியிலிருந்து கேரளத்துக்கு அனுமதியின்றி ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி, ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினா், ஜீப் ஓட்டுநா் போடி சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் வனத்துறை (37) என்பவரை பிடித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.