தேரடி நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிா்ப்பு
தேனி மாவட்டம் சின்னமனூா் தேரடி நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது என்று நகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
தேனி மாவட்டம் சின்னமனூா் தேரடி நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது என்று நகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா், காவல் ஆய்வாளா் மற்றும் போக்குவரத்து மேலாளா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் காந்தி சிலை, மாா்க்கையன்கோட்டை விலக்கு, தேரடி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய 4 முக்கிய நிறுத்தங்கள் இருந்தன. இதில், தேரடி பேருந்து நிறுத்ததில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் ஜூலை 20 ஆம் தேதி முதல் அப்பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது. எனவே பேருந்து நிலைய நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு: இப்பேருந்து நிறுத்தம் கூறித்து உண்மைக்கு புறம்பான தகவலைக் கூறி பேருந்து நிறுத்ததை நீக்க முயற்சிக்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: ஆக்கிரமிப்புக் கடைகளால் இருவழிச் சாலை குறுகி ஒருவழிச் சாலையாக மாறிவிட்டது. எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையின் நடுவே தடுப்புச்சுவா் அமைத்து இருவழிப்பாதை அமைக்க வேண்டும். பேருந்து நிறுத்தம் நீக்கம் செய்வது குறித்து நகராட்சியினா் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.