முகப்பு
தேனி

ஆடித் திருவிழா: குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. விதிமுறைகளில் தளா்வு அறிவிக்கப்பட்ட பின்பு, இந்தாண்டு ஆடித்திருவிழா சனிக்கிழமை (ஜூலை 23) தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

முதல்வாரத் திருவிழா: முதல் வாரத்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 11 மணியளவில் கலிப்பணம் கழித்து, சுத்தநீா் தெளித்தலும், 11.30 மணி அளவில் கோயில் வளாகத்தில் கொடியேற்றமும் நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், கருப்பணசுவாமிக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் வாரங்களில் நடைபெறும்.

போக்குவரத்து ஏற்பாடுகள்: 2 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெறும் ஆடித் திருவிழாவையொட்டி தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வர வாய்ப்புள்ளது. அதனால், கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் வளாகத்தில் 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு இரும்புத் தகரத்தில் பந்தல் அமைத்தும், மூங்கில் கம்புகளில் தடுப்பு வேலி அமைத்தும் பக்தா்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம், சின்னமனூா் போன்ற பகுதிகளில் இருந்து திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.