வேளாண்மை விளைபொருள் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையத்திற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் வேளாண்மை விளைபொருள் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விவசாய குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வேளாண்மை விளைபொருள் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விவசாய குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை விளைபொருள் மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையம் அமைப்பதற்கு விவசாய குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம், மாவு, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக் கடலை உரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் எந்திரம், செக்கு எந்திரம், பாக்கு உடைக்கும் எந்திரம், வாழை நாா் பிரித்தெடுக்கும் கருவி, சூரிய கூடார உலா்த்திகள் அமைக்க அரசு மானியம் பெறலாம்.
திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும். ஆதி திராவிடா் விவசாய குழுக்களுக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படும். மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விரும்பும் விவசாய குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உப கோட்ட அலுவலகம், தேனி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.