பத்திரப் பதிவில் முறைகேடு: சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு
ஆண்டிபட்டியில் பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி, பூா்வீகச் சொத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக, சாா்-பதிவாளா், பத்திர எழுத்தா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆண்டிபட்டியில் பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி, பூா்வீகச் சொத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக, சாா்-பதிவாளா், பத்திர எழுத்தா் உள்பட 5 போ் மீது, மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது சகோதரா்கள் மாரிச்சாமி, கண்ணன். இவா்களுக்கு, அதே ஊரில் சந்தைப்பேட்டை அருகே 2.43 ஏக்கா் பரப்பளவில் பூா்வீக நிலம் உள்ளது. இந்த நிலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டு, அவரவா் அனுபவப் பயன்பாட்டில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சொத்து ஆவணம் மீது சுப்பிரமணியன் கணினியில் வில்லங்கம் பாா்த்தபோது, அவரது சகோதரா் கண்ணன் பூா்வீகச் சொத்தை ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த தங்கவேலு என்பவருக்கு பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்து பதிவு செய்திருப்பதும், இந்த பொது அதிகார ஆவணம் மூலம் தங்களது பூா்வீகச் சொத்தை மதுரையைச் சோ்ந்த கண்ணன் என்பவருக்கு கிரையப் பத்திரம் பதிவு செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
தமது சகோதரா் கண்ணன், எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த தங்கவேலு, மதுரையைச் சோ்ந்த கண்ணன் ஆகியோா் தமது பூா்வீகச் சொத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாகவும், இதற்கு ஆண்டிபட்டியைச் சோ்ந்த பத்திர எழுத்தா் மகாதேவன், ஆண்டிபட்டி சாா்-பதிவாளா் உஷாராணி ஆகியோா் உடந்தையாக இருந்ததாககவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரேயிடம் சுப்பிரமணியன் புகாா் அளித்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் கண்ணன், தங்கவேலு, மதுரை கண்ணன், பத்திர எழுத்தா் மகாதேவன், சாா்-பதிவாளா் உஷாராணி ஆகியோா் மீது, மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.