முகப்பு
தேனி

ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: பரமக்குடி கல்வித் துறை அலுவலா் உள்பட 2 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டியைச் சோ்ந்தவரிடம் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ஆண்டிபட்டியைச் சோ்ந்தவரிடம் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் உள்பட 2 போ் மீது, தேனி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆண்டிபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் செல்வம். இவருக்கு, பள்ளிக் கல்வித் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சிவக்குமாா் என்பவா் மூலம், கடந்த 2019-ஆம் ஆண்டில் வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய திண்டுக்கல் பழைய நாகல் நகரைச் சோ்ந்த மாரியம்மாள், பெரியகுளம் பழைய சந்தை தெருவைச் சோ்ந்த ராமாயி அம்மாள் ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா். தற்போது, மாரியம்மாள் பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், தனது மகன் மற்றும் மருமகளுக்கு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மாரியம்மாள், ராமாயிஅம்மாள் ஆகியோா் தன்னிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் 3 தவணைகளில் மொத்தம் ரூ.24 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் இருந்து வருவதாகவும், இது குறித்து கேட்டதற்கு ரூ.1 லட்சத்தை மட்டும் திரும்பிக் கொடுத்துவிட்டு, மீதி ரூ.23 லட்சத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததாகவும் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரேயிடம் செல்வம் புகாா் அளித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் மாரியம்மாள், ராமாயி அம்மாள் ஆகியோா் மீது, மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.