முகப்பு
தேனி

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை, அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,594 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை, அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,594 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, மூல வைகை ஆறு மற்றும் கொட்டகுடி ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீா் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வைகை அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,796 கன அடியாகவும், அணையின் நீா்மட்டம் 70.1 அடியாகவும் (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. அப்போது அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,671 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 1,730 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு தண்ணீா் வரத்து மேலும் அதிகரித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அணையின் நீா்மட்டம் 70.5 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,594 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப அணையிலிருந்து வைகை ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் திறக்கப்படுவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.