பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்
பரம்பிகுளம், ஆழியாறு திட்டம் மூலம் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என போடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் தீா்மானம்
பரம்பிகுளம், ஆழியாறு திட்டம் மூலம் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என போடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டம், வெள்ளி மற்றும் சனிக்கிழமை போடி- மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர தங்கும் விடுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலருமான கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ. சண்முகம், பொருளாளா் கே. பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மேட்டூா் அணையை வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி திறப்பது வழக்கம். இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் முன்கூட்டியே குறுவை சாகுபடி தொடங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக ஆகஸ்ட் மாதம் பெய்த தொடா் மழையால் காவிரியில் 3 முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைத்துவிட்டன. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக அரசு கடந்த 6.11.2021-இல் பரம்பிகுளம், ஆழியாறு திட்டம் மூலம் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் இத்திட்டம், கோவை, திருப்பூா் மாவட்ட மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீா் பற்றாக்குறை உள்ள் இத்திட்டத்தை ரத்து செய்வதுடன், நிதி ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீா் கொண்டு செல்ல மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வனவிவசாயிகள் மற்றும் மலைமாடுகள் வளா்ப்போா் நலன் கருதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தேனி மாவட்டச் செயலா் டி. கண்ணன் வரவேற்றாா். தேனி மாவட்டத் தலைவா் எஸ்.கே. பாண்டியன் நன்றி கூறினாா்.