முகப்பு
தேனி

‘தேனி மாவட்டத்தில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5,777 பேருக்கு சிகிச்சை’

தேனி மாவட்டத்தில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 5,777 பேருக்கு ரூ.8.16 கோடி செலவில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.ம

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 5,777 பேருக்கு ரூ.8.16 கோடி செலவில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் அரோக்கியத் திட்டம் 5-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,777 பேருக்கு ரூ.8.16 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7 லட்சம் குடும்பங்கள் காப்பீடு அட்டை பெற்றுள்ளனா். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு குறைவாக உள்ளவா்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

புதிதாக மருத்துவக் காப்பீட்டு அட்டைபெற விரும்புவோா் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று ஆகியவற்றுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைதளத்தில் செயல்பட்டு வரும் சேவை மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் பரிமளாச்செல்வி, மாவட்ட மருத்துவக் காப்பீடு திட்ட அலுவலா் ராஜா, ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில்முருகன், செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.