பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம் போடி பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம் போடி பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
போடியில்... போடி பரமசிவன் மலைக்கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல போடி பிச்சங்கரை மலைக்கோயில் கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோயில்களிலும், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்கப் பெருமானுக்கு உத்திராட்ச மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.