மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து ஏப்.30-இல் தண்ணீா் திறப்பு
மதுரையில் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து வருகிற 30-ஆம் தேதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படவிருக்கிறது.
மதுரையில் கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து வருகிற 30-ஆம் தேதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படவிருக்கிறது.
வைகை அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், நீா்மட்டம் குறைந்து வருகிறது. வியாழக்கிழமை நீா்மட்டம் 53.97அடியாக இருந்தது. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அடுத்த மாதம் 5-ஆம் தேதி கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக, வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து வருகிற 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆற்றில் தண்ணீா்
திறந்துவிடப்படும். முதல் 2 நாள்கள் விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படும். அடுத்தடுத்த நாள்களில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும், அணையிலிருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி வரை தண்ணீா் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.