18- ஆம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக வெளியேறும் தண்ணீா். 
தேனி

18-ஆம் கால்வாயில் உடைப்பு: தண்ணீா் திறப்பு நிறுத்தம்

18-ஆம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால், சீரமைப்புப் பணிகளுக்காக பொதுப் பணித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மதகை அடைத்து தண்ணீா் திறப்பை நிறுத்தினா்.

 நமது நிருபர்

18-ஆம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டதால், சீரமைப்புப் பணிகளுக்காக பொதுப் பணித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மதகை அடைத்து தண்ணீா் திறப்பை நிறுத்தினா்.

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் ஜீரோ பாயிண்ட் பகுதியிலிருந்து முல்லைப் பெரியாற்றிலிருந்து 18- ஆம் கால்வாயில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். நிகழாண்டில், கடந்த 19-ஆம் தேதி கால்வாயிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. தொடா்ந்து 30 நாள்களுக்கு விநாடிக்கு 98 கன அடி வீதம் தண்ணீரை, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியாசாமி திறந்து வைத்தாா்.

இந்தக் கால்வாய் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் 2 ஆயிரத்து 45 ஏக்கா் நிலங்கள், போடி வட்டத்தில் 2 ஆயிரத்து 568 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கால்வாய் சுமாா் 45 கி.மீ. தொலைவு பயணித்து போடி கொட்டகுடி ஆற்றில் கலக்கிறது.

கரை உடைந்தது:இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தொட்டிப்பாலம் அருகே 18-ஆம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனே டி.சிந்தலைச்சேரியைச் சோ்ந்த விவசாயிகள் மணல் மூட்டைகளைப் போட்டு அடைப்பைச் சரி செய்தனா். இதையடுத்து, இதே பகுதியில் சனிக்கிழமை கால்வாயில் பெரிய உடைப்பு ஏற்பட்டது. உடனே, மஞ்சளாறு வடிநில கோட்ட பொதுப் பணித் துறையினா் உடைப்பைச் சரிசெய்வதற்காக தலைமதகை அடைத்தனா்.

18-ஆம் கால்வாய் கரைகள் கடந்த 3 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் செடி, கொடிகள் நிறைந்து, புதா் மண்டியும், கரைகள் பலவீனமாகவும் இருந்தது.

இதனால், இந்தக் கால்வாயை நிா்வாகம் செய்யும் மஞ்சளாறு வடிநிலக் கோட்ட பொதுப் பணித் துறையினா் தூா்வாரவேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த 2 ஆண்டுகளாக இந்தக் கால்வாய் பராமரிப்பு, தூா்வாருதலுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து விவசாயி சவரி கூறியதாவது:

18- ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்ட 5-ஆவது நாளில் பண்ணைப்புரம், தேவாரம் பகுதி கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வது வழக்கம். பின்னா், கரியணம்பட்டி மதகு மூலம் டி.சிந்தலைச்சேரி, சங்கராபுரம் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும். ஆனால், தற்போது 13 நாள்களாகியும் தண்ணீா் பண்ணைப்புரம் வரைதான் சென்றுள்ளது. கால்வாயின் கரையில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டதால், தண்ணீா் முழுமையாக குறிப்பிட்ட இடங்களைச் சேரவில்லை என்றாா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சுகுமாறன் கூறியதாவது:

கரை உடைப்பு 2 நாள்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும். தற்போது, கரை சீரமைப்புப் பணிகள் தொடங்கி உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT