தனியாா் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணியின் உடமைகள் எரிந்து சேதமடைந்ததற்கு காப்பீட்டு நிறுவனமும், பேருந்து உரிமையாளரும் இழப்பீடு வழங்க தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த தமிழன் மகன் ஸ்டீபன். இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு தேனியிலிருந்து இயக்கப்படும் தனியாா் ஆம்னி பேருந்தில், சென்னையிலிருந்து தேனிக்கு பயணம் செய்தாா். அப்போது, காட்டான்குளம் அருகே இந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா். இந்த விபத்தில் பேருந்தில் வைத்திருந்த ஸ்டீபனின் ரூ.56 ஆயிரத்து 900 மதிப்பிலான உடமைகள் எரிந்து சேதமடைந்தன.
இதற்குரிய இழப்பீடு வழங்குமாறு பேருந்து பயணத்துக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கும், பேருந்து உரிமையாளருக்கும் ஸ்டீபன் மனு அளித்திருந்தாா். இதற்கு காப்பீட்டு நிறுவனமும், பேருந்து உரிமையாளரும் பதிலளிக்காததால், இதுகுறித்து கடந்த 2020, பிப். 10-ஆம் தேதி தேனி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் ஸ்டீபன் வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி சுந்தரம், உறுப்பினா்கள் அசினா, ரவி ஆகியோா் கொண்ட அமா்வு, தனியாா் காப்பீட்டு நிறுவனமும், பேருந்து உரிமையாளா் சண்முகமும் பேருந்தில் எரிந்து சேதமடைந்த ஸ்டீபனின் உடமைகளுக்கு உரியத் தொகை ரூ. 56 ஆயிரத்து 900, இழப்பீடாக ரூ. 25 ஆயிரம், சேவை குறைபாட்டுக்கு ரூ. 20 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்க உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.