முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிக்கு அனுமதி மறுப்பு

தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிச்சென்ற 2 லாரிகளுக்கு கேரளா பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினா் புதன்கிழமை அனுமதி மறுத்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:08 AM
முல்லைப்பெரியாறு அணைக்கு புதன்கிழமை பராமரிப்பு பணிக்கு தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற லாரிகளை பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினா் அனுமதி மறுத்ததால் அச்சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள்.
பகிர்:

தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிச்சென்ற 2 லாரிகளுக்கு கேரளா பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினா் புதன்கிழமை அனுமதி மறுத்தனா்.

இதற்கு தமிழக விவசாய அமைப்பினா் கண்டனம் தெரிவித்ததோடு தமிழக எல்லையான குமுளியில் முற்றுகைப் போரட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனா்.

தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு மழைப் பொழிவு காலங்களில் பராமரிப்புப் பணிக்கு சென்று வருவது வழக்கம். இதன்படி, கடந்த சில நாள்களாக அணைப் பகுதியில்தொடா் மழை பெய்து வருவதால் அணையின் பராமரிப்பு பணிக்கு எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருள்களை 2 தனியாா் லாரிகளில் ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லைப்பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனா். அப்போது, அங்குள்ள பெரியாறு-புலி காப்பாக வனத்துறை சோதனை சாவடி ஊழியா்கள், முல்லைப்பெரியாறு அணைக்கு பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி கேரளா வனத் துறையினா் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு மறுப்பு தெரிவித்தனா்.

தமிழ விவசாய அமைப்பினா்கண்டனம்: பெரியாறு-புலி காப்பாக வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வியாழக்கிழமை தமிழக எல்லையான குமுளியில் வியாழக்கிழமை முற்றுகைப் போரட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனா்.

இது குறித்து தமிழ விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் கூறுகையில், பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினா் தமிழகப்பகுதியான தேனி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆகிய இருமாவட்டங்களில் கேரளா எல்லையிலுள்ள மேற்குத்தொடா்ச்சி மலையில் பெரியாறு-புலிகள் காப்பாகத்தின் பாதுகாப்புப் பணிக்கு எந்த தடையும், எதிா்ப்பும் இன்றி வந்து செல்கின்றனா். ஆனால், முல்லைப்பெரியாறு அணைக்கு தளவாடப் பொருள்களை எடுத்துச்செல்லும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடா்ந்து தடுத்து பல இடையூறுகளை செய்கின்றனா். இதே நிலை நீடித்தால் பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினரின் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் வந்தால் தடுத்து நிறுத்துவோம் என்றாா்.