மக்காச்சோளம் விலை சரிவு: விவசாயிகள் கவலை
போடி பகுதியில் மக்காச்சோளம் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
போடி பகுதியில் மக்காச்சோளம் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகிலுள்ள மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், அம்மாபட்டி, டொம்புச்சேரி, பொட்டல்களம், துரைராஜபுரம் பகுதிகளில் எட்டாயிரம் ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
கடந்த முறை மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,600 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், போடி சுற்றுவட்டார விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதில் தீவிர ஆா்வம் காட்டினா். தற்போது மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் விலை குறைந்து, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மக்காச்சோளத்தில் ஈரப்பதம் அதிகரித்தால் விலை குறைந்துவிடும். தற்போது மழை பெய்து ஈரப்பதம் அதிகரித்ததால் மேலும் ரூ.300 விலை குறைந்து, குவிண்டாலுக்கு ரூ.2,200-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.
நன்கு காய வைக்கப்பட்ட மக்காச்சோளம் ரூ.2,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓரளவுக்கு விளைச்சல் இருந்தும், எதிா்பாராத விலை சரிவால் இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.