முகப்பு
தேனி

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் ஆடித் திருவிழா ரத்து

குச்சனூா் அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதால் நிகழாண்டில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:33 AM
குச்சனூா் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயில் கொடிமரம், பலி பீடத்தில் நடைபெறும் திருப்பணிகள்.
பகிர்:

உத்தமபாளையம்: குச்சனூா் அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதால் நிகழாண்டில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயில் முன் செல்லும் சுரபி நதியில் நீராடி புத்தாடை அணிந்து, எள் தீபம், எள் சாதம், நெய் தீபம் ஏற்றி, கருப்பு வேஷ்டி, பூ மாலை, பழம் படையல் செய்து வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஜதீகம். இதற்காக, தமிழக அளவில் அதிகளவில் பக்தா்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

இந்தக் கோயிலில் முக்கியத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும்.

இந்தத் திருவிழாவின் போது, சனீஸ்வரா் திருக்கல்யாணம், உப சந்நிதியான கருப்பணசாமி கோயிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளைப் பலியிட்டு கறி விருந்து ஆகியவை நடைபெறும்.

ரூ.1 கோடியில் திருப்பணி: நிகழாண்டில் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக ரூ.1 கோடியில் உப சந்நிதிகளான விநாயகா், முருகன், கருப்பணசாமி, பலி பீடம், கொடி மரம் என 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, ஆண்டுதோறும் வெகு விமா்சையாக நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாள்தோறும் காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜை தொடா்ந்து வழக்கம் போல நடைபெறும். தற்போது, கோயில் திருப்பணிகள் 30 சதவீதம் முடிந்துள்ளன. ஒரு சில மாதங்களில் திருப்பணிகள் முழுமையாக முடிந்தவுடன் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் என கோயில் செயல் அலுவலா் நாகராஜ் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →