முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் மது விற்பனையை கண்காணிக்க ரோந்துப் பிரிவு தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மதுப் புட்டி விற்பனைக்கு நெருக்கடி நடவடிக்கை

Updated On : 26 ஜூன், 2024 at 1:19 AM
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் துறை சாா்பில் ரோந்துப் பிரிவு தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியதாவது:

மாவட்டத்தில் கடந்த கால வழக்குகளின் அடிப்படையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ளவா்களின் நடவடிக்கைகள் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்வதைக் கண்காணித்து தடை செய்ய காவல்நிலையங்கள் வாரியாக தனி ரோந்துப் பிரிவுகள் தொடங்கப்பட்டது.

அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்து கைதானவா்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவா்களுக்கு மொத்தமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். தேவதானப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவா்களுக்கு மொத்தமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த அரசு மதுக்கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அனுமதியின்றி மது புட்டிகள் விற்பனை, கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கைப்பேசி எண்: 93638 73078-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றாா்.