கன்னிவெடியில் சிக்கிய தேனி ராணுவ வீரரின் கால் அகற்றம்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி காயமடைந்த தேனியைச் சோ்ந்த ராணுவ வீரரின் கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி காயமடைந்த தேனியைச் சோ்ந்த ராணுவ வீரரின் கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
பழனிசெட்டிபட்டி முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி ரத்தினம் மகன் சுகுமாா் (32). இவா் மத்திய துணை ராணுவப் படையில் வெடிகுண்டுகளை கண்டறியும் கோப்ரா படைப் பிரிவில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த செப்.19-ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநிலம், மேற்கு சிக்பூம், குலாபுரு வனப் பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சுகுமாா், அங்கு புதைத்து வைத்திருந்த கன்னிவெடியில் சிக்கி காலில் பலத்த காயமடைந்தாா். ராஞ்சியுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சுகுமாரின் இடது காலில், முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
தற்போது அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
சுகுமாருக்கு பிரீத்தி என்ற மனைவியும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.
இந்த நிலையில், பூதிப்புரத்தில் உள்ள சுகுமாா் மனைவி பிரீத்தியின் வீட்டுக்கு அதிமுக அமைப்புச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் ராமா், முன்னாள் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் வியாழக்கிழமை சென்றனா். பின்னா், சுகுமாரின் பெற்றோா், இவரது மனைவியை ஆகியோரை சந்தித்து, ஆறுதல் கூறினா்.