முகப்பு
கிரிக்கெட்

103 மீட்டர் சிக்ஸர்.. கிழிந்த காலணிகள்.. திடீரென வைரலான ஜிம்பாப்வே வீரரின் பதிவு!

திடீரென வைரலான ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரின் பதிவைப் பற்றி...

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:46 AM
ரியான் பர்ல் மற்றும் அவரின் காலணிகள்.
பகிர்:

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகளை அடித்து துவம்சம் செய்த ஜிம்பாப்வே அணி வீரரின் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் சூப்பர் -8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், கொழும்பு பிரேமதசா திடலில் நேற்று (பிப்.19) நடைபெற்ற லீக் சுற்றின் 38-வது ஆட்டத்தில் இலங்கையும் ஜிம்பாப்வே அணியும் மோதின. இந்தப் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்று தோல்வியே காணாமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

கற்றுக்குட்டி அணி எனக் கருதப்பட்ட ஜிம்பாப்வே அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கும் அதிர்ச்சியளித்திருந்த நிலையில், இலங்கைக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல், இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் துனித் வல்லாலகே வீசிய பந்தில் அடித்த சிக்ஸர் 103 மீட்டர் உயரத்துக்குப் பறந்தது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக தூரம் விளாசப்பட்ட சிக்ஸர்களில் அதிக தூரம் கொண்ட மூன்றாவது சிக்ஸராக இது பதிவானது.

இந்த நிலையில், ரியான் பர்ல் கடந்த 2021 ஆம் ஆண்டில் தனது எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய கிழிந்த காலணி (shoe)யுடன் பகிர்ந்த பதிவு ஒன்றையும் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்தப் பதிவில், “எங்களுக்கு ஒரு ஸ்பான்ஸர் கிடைத்தால், ஒவ்வொரு போட்டித் தொடருக்குப் பின்னரும் எங்களின் கிழிந்த காலணிகளை ஒட்டுப்போட வேண்டிய தேவை இருக்காது” எனப் பதிவிட்டிருந்தார்.

சிறிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களின் விளையாட்டு வேட்கைக்காக கடுமையாக போராடுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக பர்ல் வெளியிட்டிருந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஜிம்பாப்வே அணிக்காக மூன்றாவது வரிசையில் விளையாடும் பர்ல், இதுவரை குரூப் போட்டிகளில் 58 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற மிகப் பெரிய கிரிக்கெட்டை ரசிக்கும் நாடுகளுக்குப் போட்டியாக ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன.

அமெரிக்கா, கனடா, நமீபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வெளியில் வேலைகளையும் செய்துகொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றன. இதுபோன்ற சிறிய அணிகளுக்கு ஸ்பான்ஸர்-ஷிப் கிடைப்பதும் பெரிய சிக்கலாக இருக்கிறது.

இதுவரை குரூப் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற பெரிய அணிகளையும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு ஜிம்பாப்வே அணித் தகுதி பெற்றிக்கிறது. மேலும், சென்னை சேப்பாக்கத்தில் பிப். 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணியையும் எதிர்கொள்ளவிருக்கிறது. இந்திய அணியின் வேகத்துக்கு ஜிம்பாப்வே தாக்குப் பிடிக்குமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

summary

T20 World Cup: From a viral 2021 torn-shoes post to a 103-metre six in Colombo, Ryan Burl's journey mirrors Zimbabwe's T20 World Cup revival. His all-round impact has helped power them into the Super 8s.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments