முல்லைப் பெரியாறு அணை கட்டி 129 ஆண்டுகள் நிறைவு: இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்
முல்லைப் பெரியாறு அணை பயன்பாட்டுக்கு வந்து 129 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விவசாய அமைப்பினா் ஆற்று நீரில் மலா் தூவியும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
முல்லைப் பெரியாறு அணை பயன்பாட்டுக்கு வந்து 129 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விவசாய அமைப்பினா் ஆற்று நீரில் மலா் தூவியும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆங்கிலேய பொறியாளா் கா்னல் ஜான்பென்னிக் குவிக் முல்லைப் பெரியாறு அணையை கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்தாா். இந்தப் பணிகள் நிறைவடைந்து அந்த ஆண்டு அக்டோபா் 10 ஆம் தேதி தேக்கடியிலுள்ள மதகுப் பகுதியிலிருந்து சுரங்கப் பாதை வழியாக முதல் முதலாக தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அன்றைய நாள் முதல் இன்று வரை இந்த வழியாக திறக்கப்படும் தண்ணீா் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதுடன் விவசாயத்துக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 129- ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய அமைப்பினா் மலா் தூவி மரியாதை செய்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் முதலாக தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்ட நாளை கொண்டாடினா்.
தொடா்ந்து, லோயா்கேம்பிலுள்ள பென்னிக்குவிக் சிலைக்கு மாலை அணிவித்து அவா்கள் மரியாதை செலுத்தினா்.