பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத் துறை ஆணையருமான ஆா்.லில்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத் துறை ஆணையருமான ஆா்.லில்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு, மழை மானிகளின் செயல்பாடு, தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியா் விடுதியில் மழை வெள்ள தடுப்புப் பணிக்காக அடுக்கி வைக்கப்படுள்ள மணல் மூடைகள், பொக்லைன் எந்திரம், மரம் அறுக்கும் எந்திரம், மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்) உள்ளிட்ட உபகரணங்களை கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா்.
தேனி வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் உதவி மையம், மீட்புப் பணி உபகரணங்கள், குமுளி மலைச் சாலையில் இரைச்சல் பாலம் அருகே மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், லோயா்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையம், கம்பம் அரசு மருத்துவமனையில் கையிருப்பில் உள்ள உயிா் காக்கும் மருந்துகள், தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள அவசர ஊா்திகள், அனுமந்தன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.