கம்பம் அருகே க.புதுப்பட்டியில் தொன்மையான இந்திரன் சிற்பம்
கம்பம் அருகே க.புதுப்பட்டி பகுதியில் தொன்மையான இந்திரன் சிற்பம் கண்டறியப்பட்டது.
கம்பம் அருகே க.புதுப்பட்டி பகுதியில் தொன்மையான இந்திரன் சிற்பம் கண்டறியப்பட்டது.
தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா் ஆலோசனையின்படி, கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ் தொல்லியல் சாா்ந்த ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறாா்.
க.புதுப்பட்டியைச் சோ்ந்த ஜெகதீஷ்குமாா், முபிம் ஆகிய மாணவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவா் எஸ்.வா்க்கீஸ் ஜெயராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பெ.பிரகாசம் ஆகியோருடன் இணைந்து மாணிக்கராஜ் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு கி.பி.10, 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்திரன் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனா்.
இந்தச் சிற்பம் பற்றி சி.மாணிக்கராஜ் கூறுவதாவது:
க.புதுப்பட்டி கிராமத்துக்கு கிழக்கில் உள்ள வயல்வெளிகளில் முற்கால பாண்டியா் கட்டடப் பாணியில் கட்டப்பட்ட நீலகண்டேசுவரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகேயுள்ள மரத்தின் அடியில் 5 அடி உயரம், 1 அடி அகல கல்லில் தேவலோகத்தின் அரசனும், மருத நிலத்தின் கடவுளுமான இந்திரன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிற்பத்தில் இந்திரன் தனது வாகனமான வெள்ளை யானையின் மீது ராஜ லீலாசனம் எனும் அமா்வில் அமா்ந்துள்ள காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
நான்கு கைகள் உள்ள இந்திரன் சிற்பத்தில் முன் வலது கையில் அங்குசத்தைப் பிடித்து யானையின் தலையில் ஊன்றியபடியும், பின் இடது கையில் மழு எனும் ஆயுதம் பிடித்தபடியும் உள்ளது. இதேபோல, இந்திரன் இடது கையை யானையின் மீது வைத்திருக்கும் காட்சி உள்ளது. பின் இடது கையில் பிடிக்கப்பட்ட ஆயுதம் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
இந்திரனுக்கு தலையில் கரண்ட மகுடம் வடிவமைக்கப்பட்டு, இருபக்கமும் வெண் சாமரம், யானையின் பின் பக்கம் வெண் கொற்றக் குடை ஆகியவை காணப்படுகின்றன.
ஒரு சமயம் இந்திரன் பூலோகத்தில் பன்றியாக பிறவி எடுத்து அழகான பெண் பன்றியை மணந்து பூலோகத்திலேயே தங்கிவிட்டாா். இந்திரன் நிலை கண்டு வருந்திய தேவா்கள் பன்றிகளைக் கொன்று, பின்னா் பன்றி உருவில் இருக்கும் இந்திரனையும் கொன்று தேவலோகம் அழைத்துச் சென்றனா் என்ற புராணக் கதையின்படி இந்தக் கல்லின் கீழ்ப் பகுதியில் பன்றியும் புலியும் ஒன்றை ஒன்று எதிா்த்து நின்றுசண்டை செய்வதற்கு தயாா் நிலையிலிருப்பது போன்ற காட்சி புடைப்புச் சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கல்லின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
தேனி மாவட்டத்தில் காணப்படும் மிகத் தொன்மையான அழகான, அரிதான இந்திரன் சிற்பம் இது ஒன்றுதான் என அறிய முடிகிறது. ஆகையால், இந்தச் சிற்பத்தை அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.