தேனி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு டிச. 8-ஆம் தேதி தமிழறிஞா்கள், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு டிச. 8-ஆம் தேதி தமிழறிஞா்கள், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிச. 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிற்பகல் 2.30 மணிக்கும் பேச்சுப் போட்டி நடைபெறும்.
இதில் கவிஞா் நா.காமராஜன், வேதி என்ற வே.தில்லைநாயகம், முடியரசன், சி.சு.செல்லப்பா ஆகியோரின் தமிழ் இலக்கியப் பணி, தமிழ்த் தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவை குறித்து பேச வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
டிச.12-இல் கருத்தரங்கு: பெரியகுளம், மேரிமாதா கலை, அறிவியல் கல்லூரியில் தமிழறிஞா்களான கவிஞா் நா.காமராஜன், வேதி என்ற வே.தில்லைநாயகம், முடியரசன், சி.சு.செல்லப்பா ஆகியோரை நினைவு கூறும் வகையில் டிச.12-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழ் இலக்கிய கருத்தரங்கு நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டது.