போடியில் மனைவியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த அரசு பள்ளி ஆசிரியா், 2 ஆசிரியைகள் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி குப்பிநாயக்கன்பட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயமணி மகள் கௌசல்யா (38). இவருக்கும் போடி குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்த பரமசிவம் மகன் வாஞ்சிநாதன் (49) என்பவருக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அரசு பள்ளி ஆசிரியரான வாஞ்சிநாதனுக்கும், மற்றொரு ஆசிரியையான சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தட்டிக்கேட்ட கௌசல்யாவையும், இவரது 3 குழந்தைகளையும் வாஞ்சிநாதன் கொடுமைப்படுத்தினாராம். இதற்கு சரண்யாவின் தாய், அரசுப் பள்ளி தலைமையாசிரியை தனபாக்கியம் (59) உடந்தையாக இருந்தாா்.
இந்த நிலையில், வாஞ்சிநாதன், தனபாக்கியம், சரண்யா ஆகிய 3 போ் சோ்ந்து கௌசல்யாவை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். மேலும், போடியைச் சோ்ந்த மாசானம், வாஞ்சிநாதன், தனபாக்கியம், சரண்யா ஆகியோா் சோ்ந்து கௌசல்யா பெயரில் உள்ள நிலத்தை வாஞ்சிநாதன் பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டினா்.
இதுகுறித்து கௌசல்யா அளித்தப் புகாரின் பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வாஞ்சிநாதன், சரண்யா, தனபாக்கியம், மாசானம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.