தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் படிவத்தை வாக்காளா்கள் நிறைவு செய்து சமா்ப்பிப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், தேனி நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணபிரபாவிடம் அளித்த மனு விபரம்: வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை முன்னிட்டு, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு படிவம் வழங்கி வருகின்றனா். இந்தப் படிவத்தில் 2, 3-ஆம் பாகத்தை நிறைவு செய்வதில் வாக்காளா்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் வரிசை எண், வாக்குச் சாவடி எண், பாகம் எண் ஆகியவற்றை படிவத்தில் நிறைவு செய்வதற்கு, அந்த ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் இல்லாமல் வாக்காளா்கள் சிரமப்படுகின்றனா்.
வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடமும் 2002-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் வழங்கப்படவில்லை. தனியாா் கணினி நிலையத்துக்குச் சென்று 2002-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலைக் கண்டறிந்து படிவத்தை நிறைவு செய்வதற்கு ரூ. 100 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
வாக்காளா்களின் சிரமம் கருதி வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் படிவத்தை நிறைவு செய்து சமா்ப்பிப்பதற்கு வாக்குச் சாவடி வாரியாக சிறப்பு முகாம் நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.