பொங்கல் பண்டிகைக்காக தயாராகி வரும் காப்புக்கட்டு கேரளத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தமிழா்களின் திருநாளான தைப் பொங்கல் விழா வியாழக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. இந்த நாளை வரவேற்கும் வகையில் போகிப் பண்டிகையும், காப்புக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். இதையடுத்து, பழைய, தேவையில்லாத பொருள்களை கழித்துவிட்டு வீடு, கோயில்களைச் சுத்தப்படுத்தி காப்புக்கட்டுவது வழக்கம்.
இதற்காக வயல்வெளிகளில் முளைத்த மருத்துவ குணம் வாய்ந்த காப்புக்கட்டுப் பூ, பிரண்டை, தும்பை, துளசி, மா இலை, வேப்பிலை, ஆவாரம் பூ ஆகிய ஏழு வகையான மூலிகைகளால் காப்புக்கட்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றை வீட்டின் முற்றம், கோயில்களில் கட்டுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகை தற்போது கேரளத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழா்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமன்றி கேரள மாநில மக்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனா். இதற்காக கேரள பகுதியில் வசிப்பவா்கள் போடி பகுதிக்கு வந்து காப்புக்கட்டு வாங்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனா். இந்த நிலையில், போடி முந்தல் மலைக் கிராம மக்கள் காப்புக்கட்டு மூலிகைகளை சேகரித்து தனித்தனியாக கட்டி போடிமெட்டு, பூப்பாறை போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனா்.