பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இது குறித்து தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே.ரஜினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜி.கல்லுப்பட்டி வடக்குத் தெருவில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாமல் குப்பைக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதாகவும், சாலை வசதியின்றி குடியிருப்புகள் முன் கழிவு நீா் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் சாா்பில் ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தாா்.
இந்த மனுவின் அடிப்படையில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், உதவிப் பொறியாளா், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிச் செயலா் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைளை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஜி.கல்லுப்பட்டி வடக்குத் தெருவில் கழிவுநீா் கால்வாயைத் தூா் வாரி, சிமெண்ட் சாலை அமைத்து நீதிமன்றத்தில் புகைப்படம், அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்தனா் என்றாா் அவா்.