ஆந்திராவில் நடைபெறும் தொடர் போராட்டத்தின் விளைவாக, அருப்புக்கோட்டையில் சேலைகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி செய்வது முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதில் நேரடியாக சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 7 ஆயிரம் தொழிலாளர்களும் என மொத்தம் 22 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். விசைத்தறியில் பாலிகாட்டன், காட்டன் பை, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள துவாரக்குடி, சீரளா மார்க்கெட்டுகளுக்கு சேலைகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆந்திர மாநிலத்தின் இயற்கை சூழலுக்கு தகுந்தவாறு அங்கு வசிக்கும் மக்கள் காட்டன் சேலைகளையே அதிகம் விரும்பி அணிகின்றனர். தற்போது ஆந்திராவில் தனி தெலுங்கானாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், அங்கு வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக ஆந்திர வியாபாரிகள், அருப்புக்கோட்டை மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு சேலைகள் வாங்க வருவது வெகுவாக குறைந்து விட்டது. எனவே அருப்புக்கோட்டை பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேங்கிக் கிடக்கிறன. நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சரிகட்ட தமிழக அரசே சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.