சாத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோயில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதற்கு அரசு உரிய நிதி ஒதுக்கி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்துள்ள சத்திரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டபட்டதாக கூறப்படுகிறது. செவல்பட்டி ஜமீன்தாரின் பராமரிப்பில் இருந்த இக்கோயில் 1952 ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ஆனால், கடந்த 60 ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. நுழைவு வாயிலில் உள்ள கதவு பெயர்ந்து சேதமடைந்துள்ளது. பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி அறை முழுமையாக சேதமடைந்துள்ளது. மண்டபங்கள் முற்றிலும் சிதைந்து உள்ளன. கோயிலின் வெளிப்புற சுவர்களில் காரை பெயர்ந்து அலங்கோலமாக காட்சி தருகின்றன. கோயில் முன்பு உள்ள தேர் நிலை வாசல், செடிகள் முளைத்து முழுமையாக சிதிலமடைந்துள்ளது. மண்டபத்திற்கு பின்பு உள்ள குளம் தூர்ந்து கிடக்கிறது. தேரும் சேதமடைந்துள்ளது. இங்கிருந்த தொன்மையான பொருள்கள் மற்றும் சிலைகள் அரசு கருவூலத்தில் பாதுகாக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இக்கோயிலை புனரமைத்து வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமயஅறநிலையத்துறை புனரமைப்பு பணிக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
இதில், கோயில் கருவறை உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் தான் புதுப்பிக்கபட்டுள்ளன. கோயிலை முழுமையாக சரிசெய்து கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொன்ராஜ் கூறியதாவது; 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலில் தேரோட்டம் மற்றும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்தது. சிவகாசி, கழுகுமலை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில்இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர்.
பின்னர் ஏனோ விழா நடைபெறவில்லை. இக்கோயில் பராமரிப்பதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மன்னர்கள் தானமாக வழங்கினார்கள். பல கோடி மதிப்புடைய நகைகளும் அரசின் கருவூலத்தில் உள்ளது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் கூறியது: கோயில் புனரமைப்பு பணிக்காக தமிழக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் கோயிலை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.