ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்துக்கு முயற்சி: இந்து முன்னணியினர் 16 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன், ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன், ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பு.முத்தரசு (32). நந்தவனப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சோ.குணசேகர் (51). இருவரும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி வத்திராயிருப்பில் வேலை முடித்துவிட்டு, கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பூவாணியைச் சேர்ந்த க.முருகன் பிள்ளையார்நத்தம் விலக்கிலிருந்து பிரதான சாலைக்கு இருசக்கரவாகனத்தில் வந்தபோது, இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டன.
இதில், காயமடைந்த முத்தரசு, குணசேகர், முருகின் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், முருகன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக பதிவேட்டில் பதிய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர் அதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு, விபத்து குறித்து முத்தரசு புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்து முன்னணி நகரத் தலைவர் சுரேஷ் தலைமையில் 16 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவரிடம், முருகன் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாக காயச்சான்று வழங்காததைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இந்நிலையில், போலீஸாரின் தடையை மீறி, ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற இந்து முன்னணியினர் 16 பேர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.