சிவகாசியில் சாலை விபத்தில் சிக்கியவர்களை அமைச்சர் மீட்டார்
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மொபெட்டும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவர்களை பால்வளத்துறை
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மொபெட்டும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவர்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீட்டு காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி வடக்கூரைச் சேர்ந்தவர்கள் மாரீஸ்வரன் மகன் காளிராஜ் (21), ஞானசேகர் மகன் பிரவீன் (15), ஆபிரகாம் லிங்கம் மகன் மனோஜ்லாசர் (14). இவர்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு இருசக்கர வாகனத்தில் சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே சிவகாசி சம்சிகாபுரம் அருகே உள்ள வாகை குளத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் (62) என்பவர் ஓட்டி வந்த மொபெட்டும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. அப்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்த விபத்தை கண்டார்.
இதையடுத்து அவர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி காயமடைந்த வைத்தியலிங்கம், பிரவீன், மனோஜ்லாசர் மூவரையும் மீட்டு தனது பாதுகாப்புக்காக வந்த காவல் துறை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் காளிராஜுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.