காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கப் பேரவையில் தீர்மானம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் வியாழக்கிழமை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 12 ஆவது மாவட்ட பேரவைக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சு. முத்துராஜ் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டு கோரிக்கைகள் மற்றும் தீர்மானம் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், அனைத்து நிலையிலான அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைந்து, ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும். மேலும், அரசுப் பணியில் உள்ளோருக்கு தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பணி சீரமைப்பு என்ற பெயரில் அரசுத் துறையில்
உள்ள பணியிடங்களை காலி செய்யும் ஆதிசேஷய்யா குழுவை கலைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ச.இ. கண்ணன், மாவட்டத் தலைவர் குருசாமி உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில், மாநில மகளிர் துணைக் குழு அய்யம்மாள் நன்றி கூறினார்.