விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஒன்றியங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திராபாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாமிரவருணி ஆற்றுநீரை ஆதாரமாகக்கொண்டு, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ராஜாபுதுக்குடி, சலவாப்பேரி ஆகிய இடங்களில் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் விருதுநகர் மாவட்டம் உப்புத்தூர் விலக்கருகே நீரேற்றும் நிலையத்தின் மூலம், நடுவப்பட்டி, பாவாலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் 156 தரை மட்ட நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு 755 ஊரகக்குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். தற்போது தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து, சோதனை ஓட்டமாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் ரூ.234 கோடி மதிப்பில் இந்த திட்டப்பணிகள் தொடங்கின. இந்த திட்டத்தின் மூலம் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த 755 கிராமங்கள் பயன்பெறும். தினசரி 210 லட்சம் குடிநீர் கிடைக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ராஜசேகர், நிர்வாகப் பொறியாளர் விஸ்வலிங்கம், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.