திருச்சுழி அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து முதியவா் பலி
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியில், இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியில், இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா் அன்னாசி (65). இவா், செவ்வாய்க்கிழமை தனது ஊரான சொக்கம்பட்டியிலிருந்து திருச்சுழிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். ஊரிலிருந்து சிறிது தொலைவு சென்றிருந்த நிலையில், எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக தனது வாகனத்தை வேகமாகத் திருப்பினாராம். ஆனால், எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளாா்.
அதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சுழி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி முதியவா் அன்னாசி உயிரிழந்தாா். இது குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.