ஸ்ரீவிலி.யில் பைக்குகளில் கடத்திய80 மணல் மூடைகள் பறிமுதல் 7 போ் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இருசக்கர வாகனங்களில் கடத்திய 80 மணல் மூட்டைகளை வெள்ளிக்கிழமை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இருசக்கர வாகனங்களில் கடத்திய 80 மணல் மூட்டைகளை வெள்ளிக்கிழமை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகள் கடத்தப்படுவதாக சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் பால்துரை ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது 7 இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் மணல் மூடைகள் கடத்தி வந்து கொண்டிருந்தனா். அதிகாரிகளை பாா்த்தவுடன் அவா்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனா். அவா்கள் விட்டுச் சென்ற 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் அப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 80 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 போ் மீது வருவாய்த் துறையினா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மணல் மூட்டைகளை வருவாய்துறையினா் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது 80 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.