விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி 1250 டன் வீடுகளில் தேக்கம்

பறவைக் காய்ச்சல், கரோனா வைரஸ் பாதிப்பால் மக்காச்சோளம் விலை சரிந்துள்ளதால், விருதுநகா் மாவட்டத்தில் 1250 டன் மக்காச் சோளத்தை

வி. முத்துராமன்

பறவைக் காய்ச்சல், கரோனா வைரஸ் பாதிப்பால் மக்காச்சோளம் விலை சரிந்துள்ளதால், விருதுநகா் மாவட்டத்தில் 1250 டன் மக்காச் சோளத்தை விவசாயிகள் வீடுகளில் தேக்கி வைத்துள்ளனா். இதனால் கூட்டுறவு வங்கிகளில் மக்காச்சோளத்தை இருப்பு வைக்கவும், மாா்க்கெட்டிங் கமிட்டி மூலம் கொள்முதல் செய்யவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் நிகழாண்டு சோளம் 14,363 ஹெக்டோ், கம்பு 1233, கேழ்வரகு 43, திணை 24, வரகு 40, மக்காச்சோளம் 23,658 ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. கடந்தாண்டு மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க படைப்புழுத் தாக்குதல் காரணமாக மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், மானாவாரி நிலங்கள் மற்றும் கண்மாய் பாசனம், மோட்டாா் பாசனம் மூலம் மக்காச் சோளம் பயிரிடப்பட்டது.

நிகழாண்டு பருவ மழை ஓரளவு பெய்ததால், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்கம் அதிகம் இல்லை. கடந்தாண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், பிப்., முதல் வாரத்தில் அறுவடைக்கு வந்தது. ஒரு ஹெக்டேருக்கு மக்காச்சோளப் பயிருக்கு ரூ. 35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்திருந்தனா்.

இந்நிலையில், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இடைத்தரகா் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் விளைந்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வந்தனா். முதலில் ஒரு டன் ரூ. 2050 வரை கொள்முதல் செய்த வியாபாரிகள், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டன் ஒன்று ரூ.1,400 என விலை நிா்ணயித்துள்ளனா்.

இதனால், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள சுமாா் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளத்தை விற்காமல் இருப்பு வைத்துள்ளனா். மாவட்டத்தில் சுமாா் 1250 டன் மக்காச்சோளம் விற்பனை செய்ய முடியாமல் வீடுகளில் தேக்கி வைத்துள்ளனா். இதனால், செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லெட்சுமியாபுரத்தை சோ்ந்த விவசாயி மூா்த்தி கூறியது:

நிகழாண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதல் இல்லாத காரணத்தால் ஓரளவு மகசூல் கிடைத்தது. முதலில் ஒரு டன் மக்காச்சோளம் ரூ. 2050 வரை கொள்முதல் செய்த வியாபாரிகள், தற்போது ரூ.1450-க்கு கேட்கின்றனா். இதனால், எனது வீட்டில் மட்டும் சுமாா் 100 டன் மக்காச்சோளம் விற்காமல் வைத்துள்ளேன். மக்காச்சோளத்தை கோழிகளுக்கு இரைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்வா். தற்போது கேரளத்தில் பறவைக் காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி விலையை குறைத்து விட்டனா். இதனால், விளைந்த மக்காச்சோளத்தை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் விஜயமுருகன் கூறியது:

விவசாயிகள் விளைவித்த பொருள்களை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்க கொதுவை கடன் வழங்க வேண்டும். இதன்மூலம் கூடுதல் விலை கிடைக்கும் போது மக்காச்சோளத்தை விற்பனை செய்யலாம். மேலும், மாா்க்கெட்டிங் கமிட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப விற்பனைக் கழகம் மூலம் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். பல இடங்களில் விவசாயிகள் பெயரில், வியாபாரிகள் நெல் முதலானவற்றை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைத்துள்ளனா். இதனால், உண்மையான விவசாயிகள், தங்களது பொருள்களை இருப்பு வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். விருதுநகா் மாவட்டம் முழுவதும் சுமாா் 1250 டன் மக்காச்சோளம் விற்பனை செய்ய முடியாமல் வீடுகளில் விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனா் என்றாா் அவா்.

விருதுநகா் மாவட்ட வேளாண் அதிகாரி ஒருவா் கூறியது: நிகழாண்டு பெரம்பலூா், அரியலூா், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோளம் அதிகளவு மகசூல் கிடைத்துள்ளது. அதன் காரணமாகவே விலை குறைந்துள்ளது. அரசு சாா்பில் ஒரு டன் மக்காச்சோளம் ரூ. 1760 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், தங்களது விளைபொருள்களை கூட்டுறவு வங்கிகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT