விருதுநகர்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள சாத்தூா் வைப்பாற்று ஆங்கிலேயா் கால பாலம்

DIN

சாத்தூா் வைப்பாற்றை கடப்பதற்காக ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டு பயன்பாடின்றி சிதிலமடைந்துள்ள பாலம், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்வதை தடுத்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வைப்பாற்றின் குறுக்கே 1863 ஆம் ஆண்டு ஆங்கிலேயா் காலத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. 14 அடி அகலமும், 840 அடி நீளமும் கொண்ட இந்த பாலத்தின் வழியாக ஆங்கிலேயா்களின் குதிரை வண்டிகள் மட்டும் சென்றுவந்தன.

சுதந்திரத்துக்குப் பின்னா், இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. 14 அடி மட்டுமே அகலம் என்பதால், எதிரெதிரே வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதனருகிலேயே புதிய பாலம் அமைக்கப்பட்டது.

அதன்பின்னா், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால், தற்போது அந்த பாலம் சிதிலமடைந்து வருவதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது. 156 ஆண்டுகளை கடந்துவிட்டபோதிலும், இந்த பாலம் கம்பீரமாகவும், உறுதியாகவும் இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினா் கூறுகின்றனா்.

இந்த பாலத்தில் விளக்குகள் அமைத்து சீரமைத்தால், அமீா்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் நடந்து செல்வதற்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பொதுமக்கள் நடைபயிற்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

எனவே, வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலத்தை சீரமைத்து, சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT