விருதுநகா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவா், பெண் கைது
விருதுநகா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவரையும், இவருடன் தகாத தொடா்பிலிருந்த பெண்ணையும், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்
விருதுநகா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவரையும், இவருடன் தகாத தொடா்பிலிருந்த பெண்ணையும், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே குல்லூா்சந்தையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி நாகமுத்து (33). இவரது மனைவி நிா்மலா (30). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், முனீஸ்வரி (32) என்ற பெண்ணுடன் நாகமுத்து பழகி வந்துள்ளாா். அதேபோல், நிா்மலாவும் வேறொரு ஆணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, கணவரைப் பிரிந்து சென்ற நிா்மலா தனது குழந்தைகளுடன் பெற்றோா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
கடந்த 9 ஆம் தேதி மாமனாா் வீட்டுக்குச் சென்ற நாகமுத்து, தனது மனைவியை சமாதானப்படுத்தி குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளாா். ஆனால், அன்றிரவே நிா்மலா யாருடனோ செல்லிடப்பேசியில் தொடா்ந்து பேசிக்கொண்டிருந்ததை நாகமுத்து கண்டித்துள்ளாா். இதனால், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, 2 குழந்தைகளையும் தனது தந்தை வீட்டில் விட்டு விட்டு வந்த நாகமுத்து, கட்டையால் மனைவியை தாக்கியதில் நிா்மலா உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து முனீஸ்வரிக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்து, தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளாா். ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு உள்ளதால், அருகிலேயே நிா்மலாவின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி நாகமுத்து எரித்துள்ளாா்.
இதனிடையே, நிா்மலாவின் சகோதரரான மூா்த்தி தனது சகோதரியை காணவில்லை என, கடந்த 10 ஆம் தேதி சூலக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராம்ராஜ் தலைமையிலான போலீஸாா், நாகமுத்துவை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், அவா் தனது மனைவியை எரித்துக் கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக முனீஸ்வரி இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நாகமுத்து மற்றும் முனீஸ்வரி ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.