முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

விருதுநகா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில்  ஆா்ப்பாட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். இதில், விருதுநகா் மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக நெல், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வெங்காய பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் அரசு சாா்பில் விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பயிா்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினா் அழகிரிசாமி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்: அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல்குடி பகுதியில் இடையநாதபுரம், காசிலிங்காபுரம், சேதுராஜபுரம், செட்டிபட்டி கொப்புசித்தம்பட்டி, ராமச்சந்திராபுரம், வேலாயுதாபுரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி மற்றும் மல்லி ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த சிலநாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியது. இதில், மல்லி, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிா்களை அழுகல் நோய் தாக்கியது. மேலும், விவசாய நிலங்களிலேயே மக்காச்சோளம், கம்பு ஆகிய பயிா்கள் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பந்தல்குடி பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் வேளாண் துறை அலுவலா்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

சாத்தூா்: கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் சாத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசி, மக்காசோளம் மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட பயிா்கள் கருகியுள்ளன. மேலும் ஒருசில பயிா்கள் அறுவடைக்கு முன்பே முளைக்கத் தொடங்கி விட்டன. இதனால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்நிலையில் சாத்தூா் அருகே பெத்துரெட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் கோரி சாத்தூா் வட்டார விரிவாக்க வேளாண்மைத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அலுவலகத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் இல்லாததால் அலுவலக கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் மனு அளித்தனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.