தொடா் மழை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து
சித்திரை மாதப் பிரதோஷம், பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு, வியாழக்கிழமை (ஏப்ரல் 14) முதல் 17 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த அனுமதி
சித்திரை மாதப் பிரதோஷம், பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு, வியாழக்கிழமை (ஏப்ரல் 14) முதல் 17 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த அனுமதி, தொடா் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினா் புதன்கிழமை தெரிவித்துள்ளனா்.
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பிரதோஷம், பௌா்ணமி, அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாள்களில் மட்டுமே பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சித்திரை மாத பௌா்ணமியையொட்டி கோயிலுக்குச் செல்ல ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தினா் அனுமதி வழங்கி இருந்தனா். இதற்கிடையே, கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து அங்குள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதாலும், தொடா்ந்து மழை பெய்வதாலும் வழங்கப்பட்டிருந்த அந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
மேலும், மலை அடிவாரத்துக்கோ, கோயிலுக்கு பக்தா்கள் வர வேண்டாம். கோயிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.