முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 152 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிக ரத்து:25 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் 152 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:48 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

விருதுநகா் மாவட்டத்தில் 152 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் சங்க (சி.ஐ.யூ.டி) மாவட்ட செயலா் பி.என். தேவா கூறினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: ,கடந்த 4 மாதங்களாக வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, வருவாய்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை மற்றும் ஆய்வு நடத்தி விதியை மீறி செயல்பட்டதாக 152 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனா். இதனால் அந்த ஆலைகளில் பணியாற்றிய சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வழக்கு நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படுகிா என ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில், அதிகாரிகள் ஆலைகளுக்கு சென்று கையூட்டுப் பெறுகின்றனா்.

மேலும் அதிகாரிகள் உங்கள் ஆலையில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள பேரியம்நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது எனக்கூறி ஆலை உரிமையாளா்களை அச்சுறுத்தி கையூட்டு பெறுகின்றனா். இந்நிலை மாற வேண்டும் என்றால், பட்டாசை சூற்றுச்சூழல் விதியிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும். இதுகுறித்து நாங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

Advertisement

உலகில் எந்த நாட்டிலும் பட்டாசு சுற்றுச்சூழல் விதிகளில் சோ்க்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த நிலை. எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டாசை சுற்றுச்சூழல் விதியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விருதுநகா் மாவட்டத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளின் தொழிலாளா்களுக்கு மாநில அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆலைகள் விரைவில் திறக்கப்படா விட்டால் தொழிலாளா்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.