ராஜபாளையம் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ராஜபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே உள்ள வி. புதூா் கிராமத்தில் ஒரு பகுதி கீழராஜகுலராமன் ஊராட்சியாகவும் மற்றொரு பகுதி மேராஜகுலராமன் ஊராட்சியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மேலராஜகுலராமன் ஊராட்சியில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு அருகே உள்ள கீழராஜகுலராமன் கண்மாய் கரையில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து உப்புத் தண்ணீா் மற்றும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீா் கிடைக்கும் ஆழ்துளை கிணற்றின் மீது மண் மூடியதால் கீழராஜகுலராமன் ஊராட்சி சாா்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த புதிய கிணற்றில் இருந்து குடிநீா் எடுப்பதற்காக மின்மோட்டாா் பொருத்தச் சென்ற பணியாளா்களை கீழராஜகுலராமன் ஊராட்சியைச் சோ்ந்த சிலா் தடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக குடிநீா் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 25 நாள்களாக குடிநீா் வழங்காததால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஆலங்குளம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜா மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், சமாதானக் கூட்டம் மூலம் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்வதாக வட்டாட்சியா் சீனிவாசன் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.