ஸ்ரீவிலி.யில் 4,295 மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகள் வழங்கல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4,295 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் எண்ணும் எழுத்தும்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4,295 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சிக் கையேடுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மேரி தலைமை வகித்தாா். ஆசிரியை ஆனந்தவல்லி வரவேற்றாா். புத்தகங்களை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் மலா்கொடி கூறியதாவது:
2025 ஆம் கல்வியாண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மூன்றாம் வகுப்பை நிறைவு செய்த மாணவா்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும். இதற்காக மாணவா்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலா் என மூன்று வகையாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 4,295 மாணவ மாணவியருக்கு இந்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டு, ஆசிரியா்களுக்கு கையேடும் உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது என்றாா். ஆசிரியை ஆவுடையம்மாள் நன்றி கூறினாா்.