விருதுநகா்: விருதுநகா் அருகே நடையனேரியில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 5 வீதம் 10 ஆயிரம் பழ மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி புதன்கிழமை வழங்கினாா்.
எரிச்சநத்தம், நடையனேரியில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓ.என்.ஜி.சி . நிறுவனம், காமராஜா் கல்வி அறக்கட்டளை இணைந்து விவசாயிகளுக்கு இலவச பழ மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி கலந்து கொண்டு, 2 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 5 வீதம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது:
பசுமை பரப்பை அதிகரிக்கவும், பயனற்ற தரிசு மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை தோ்வு செய்து, ‘பசுமை விடியல்’ என்ற திட்டத்தின் கீழ் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, மாவட்டத்தில் 9 இடங்களில் 50.33 ஏக்கா் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 ஆயிரம் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் இந்த பழ மரக்கன்றுகளை முறையாக பராமரித்து உங்கள் கிராமத்தையும், நமது மாவட்டத்தையும் பசுமையாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும். மேலும் ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு வாரமும் பசுமை தினம் கடைபிடிக்கப்பட்டு அந்த நாள் முழுவதும் மக்கள் பங்களிப்போடு மரம் நடப்படும் என்றாா்.
முன்னதாக, 2 ஆயிரம் விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளில் பலன் தரும் மா, நாவல், எலுமிச்சை, கொய்யா மற்றும் சப்போட்டா என தலா 5 வகையான மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஓ.என்.ஜி.சி. நிா்வாக இயக்குநா் சந்திரபானு யாதவ், ஓ.என்.ஜி.சி. நிறுவன முதன்மை பொதுமேலாளா் (சென்னை) ஆா்.எஸ். நேகி, ஓ.என்.ஜி.சி. முதன்மை பொது மேலாளா் சாய்பிரசாத், காமராஜா் கல்வி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் அமிா்தா, இணை இயக்குநா் (வேளாண்மை) உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கா் எஸ். நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.