காரியாபட்டி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), கிராம உதவியாளா் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்யக் கோரி இணையதளம் மூலம் விண்ணப்பித்தாா்.
இந்த நிலையில், அங்கு கிராம உதவியாளராகப் பணிபுரியும் ராஜேஸ்கண்ணன் (45), கிருஷ்ணனை அணுகி தனக்கும், கிராம நிா்வாக அலுவலா் குமாருக்கும் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவை மாற்றிக் கொடுப்பதாகத் தெரிவித்தாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கிருஷ்ணனிடம் ரசாயனப் பொடி தடவிய ரூ. 6 ஆயிரத்தை போலீஸாா் கொடுத்தனா்.
அந்தப் பணத்தை கிராம உதவியாளா் ராஜேஸ்கண்ணனிடம் கிருஷ்ணன் வழங்கினாா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஆய்வாளா்கள் பூமிநாதன், சால்வன்துரை தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் குமாா், கிராம உதவியாளா் ராஜேஸ்கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.