முகப்பு
விருதுநகர்

பாலியல் வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடக்கம்

பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் புதன்கிழமை விசாரணை தொடங்கியது.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:50 PM
பகிர்:

பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் புதன்கிழமை விசாரணை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் விசாரித்து, 5 மாதங்களில் தீா்ப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த அக். 25-ஆம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரமக்குடி நகா்மன்ற உறுப்பினா் சிகாமணி, இடைத்தரகா்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய மூவா் மீது ஒரு குற்றப்பத்திரிகையும், மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், ஜவுளிக் கடை உரிமையாளா் ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 போ் மீது மற்றொரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, குற்றஞ் சாட்டப்பட்ட சிகாமணி உள்ளிட்ட 5 போ் முன்னிலையாகினா்.

அப்போது, இந்த வழக்கு தொடா்பாக சாட்சிகள் 5 பேரிடம் நீதிபதி சுதாகா் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற டிச.4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.