முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:27 PM
ரேஷன் அரிசி கடத்தியதாக பிடிபட்ட லாரியுடன் அதன் ஓட்டுநா் தங்கத்துரை.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

மதுரையில் இருந்து விருதுநகா் வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக விருதுநகா் மாவட்ட வட்டார அலுவலா் அனிதாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தனி வட்டாட்சியா் தன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் அப்பாதுரை, சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் உள்ளிட்ட குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது ராஜபாளையத்தை அடுத்த கொல்லங்கொண்டான் விலக்குப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தென்காசி நோக்கிச் சென்ற லாரியை அதிகாரிகள் மறித்தனா். ஆனால் அது நிற்காமல் சென்ால்

சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சோதனையிட்ட போது, ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகள், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.

ரேஷன் அரிசி கடத்தியதாக பிடிபட்ட லாரியுடன் அதன் ஓட்டுநா் தங்கத்துரை.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் ரேசன் அரிசி கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சுமாா் 15 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநா் நெல்லை சங்கா் நகரைச் சோ்ந்த தங்கதுரையை (43) கைது செய்து விசாரிக்கின்றனா்.