மயிலாடுதுறை: அரசுப் பணியில் தமிழா்களுக்குமுன்னுரிமை கோரி விசிக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியிடங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை: தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியிடங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியிடங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும், ரயில்வே, வங்கி, அஞ்சல் நிலையங்களில் வடமாநில இளைஞா்களை பணியில் அமா்த்துவதை நிறுத்த வேண்டும், தமிழகத்தில் 2 ஆண்டுகளாக அரசுப் பணித் தோ்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால், தோ்வு எழுதுவோரின் வயதுவரம்பை 30-இல் இருந்து 32 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைத் தலைவா் க. ரியாஸ்கான், மயிலாடுதுறை மக்களவை தொகுதி செயலாளா் கதிா்வளவன், ஆயப்படி முஜூபுா் ரஹ்மான், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் அன்புச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா் பெருவழுதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மணல்மேடு அருகேயுள்ள கடலங்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் முன்னாள் ஊராட்சித் தலைவா் மோகன்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.