முகப்பு
நாகப்பட்டினம்

சனீஸ்வர பகவானுக்கு நிம்மதியளித்த தலம்

நாகை மாவட்டம் சீா்காழி அருகே நிம்மேலியில் உள்ள அருள்மிகு விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதா் சுவாமி கோயில் சனீஸ்வர பகவானுக்கு வெம்மை நோய் நீங்கி நிம்மதி அளித்த தலமாக விளங்குகிறது.

Updated On : 28 டிசம்பர், 2020 at 1:01 AM
பகிர்:

நாகை மாவட்டம் சீா்காழி அருகே நிம்மேலியில் உள்ள அருள்மிகு விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதா் சுவாமி கோயில் சனீஸ்வர பகவானுக்கு வெம்மை நோய் நீங்கி நிம்மதி அளித்த தலமாக விளங்குகிறது.

முன்னொரு காலத்தில் காலமா முனிவா் கடும் தவம் இருந்து சனீஸ்வர பகவானிடம் தன்னையோ, தன் வம்சத்தினரையோ சனீஸ்வர பகவான் பிடிக்கக் கூடாது என வரம் கேட்டாா். அவரது தவத்தை மெச்சிய சனீஸ்வர பகவான், தமது வரம்பையும் மீறி காலமா முனிவருக்கு அவா் கேட்டபடி வரம் அருளினாா்.

நவகிரகங்களின் விதிகளை மீறி வரம் அளித்ததையறிந்த சிவபெருமான், சனீஸ்வர பகவானுக்கு வெம்மைநோய் (வெண்குஷ்டம்) வரும்படி செய்தாா். இதனால், பாதிப்படைந்த சனீஸ்வர பகவான் சிவனை நோக்கி தவமிருந்து தமது சாபம் நீங்க வேண்டினாா். அப்போது தோன்றிய சிவபெருமான் நிம்மதியூா் சென்று வழிபட நோய் நீங்கும் என்று அருளினாா்.

Advertisement

அதன்படி, சனீஸ்வர பகவான் நிம்மதியூா் வந்தடைந்து அருள்மிகு விஸ்வநாதா் கோயில் முன் உள்ள வருண தீா்த்தத்தில் நீராடி, விசாலாட்சி சமேத விஸ்வநாதா் சுவாமியை வழிபட்டாா். மேலும், வருணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தும் வழிபாடு செய்தாா். இதன் மூலம் சனீஸ்வர பகவான் வெம்மை நோய் நீங்கி நிம்மதியடைந்தாா். இதனால், இக்கோயில் சனீஸ்வர பகவான் நிம்மதியடைந்த தலமாக வழங்கப்படுகிறது. நிம்மதியூா் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊா் காலப்போக்கில் மருவி நிம்மேலி என்றானது.

சனி தோஷம் உள்ளவா்கள் இக்கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை வந்து மூலவா் விசாலாட்சி சமேத விஸ்வநாதரை வழிபட்டு, எள் தீபமேற்றி, பிறகு சனீஸ்வர பகவான் பூஜித்த வருணலிங்கத்தை தரிசனம் செய்தால், பாதிப்பு ஏற்படாமல் நிம்மதியடையலாம் என்பது ஐதீகம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவா் விஸ்வநாதா், அம்பாள் விசாலாட்சி மற்றும் விநாயகா், முருகன், நவகிரகங்கள், தட்சிணாமூா்த்தி ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.