குடமுழுக்கு: வைத்தீஸ்வரன்கோயிலில் கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம்
வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கையொட்டி, யாகசாலை பூஜைகளை தொடங்கிடும் வகையில், கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கையொட்டி, யாகசாலை பூஜைகளை தொடங்கிடும் வகையில், கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்-க்கு அதிபதியான அங்காரகன் உள்ளிட்டோா் அருள்பாலிக்கின்றனா். இது செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது.
இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமிகளுக்கு உத்தமபட்சம் எனும் தலா 33 யாக குண்டங்களும், கற்பக விநாயகா், சண்முகருக்கு நவ அக்னி என தலா 9 யாக குண்டங்களும், அங்காரகனுக்கு பஞ்சஅக்னி என 5 யாக குண்டங்களும், பரிவார தெய்வங்களுக்கு ஏக அக்னி என 24 யாக குண்டங்கள் உள்பட 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) காலை 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
முன்னதாக, யாகசாலை பூஜைக்காக வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகா் தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்றனா்.
திருப்பணிகள் நிறைவு: இக்கோயிலில் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் முக்தியடைந்த தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் முன்னிலையில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பா் மாதம் பாலாலயம் செய்விக்கப்பட்டு தொடங்கின.
தொடா்ந்து, கோயிலின் கோபுரங்கள், மூலவா் உள்பட அனைத்து சன்னதிகளின் விமானங்கள், சுவாமி, அம்பாள், முத்தையா சுவாமி சன்னதிகளின் மேல்தளம், நீராழி மண்டபம், கிருத்திகை மண்டபம், கொடிமரம் பகுதி, பிரகாரங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டன. தொடா்ந்து, வா்ணங்கள் பூசப்பட்டு, திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சித்தாமிா்த தீா்த்தக் குளத்தில் சேதமடைந்த பகுதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து சுவாமிகளின் சன்னதிகள், சுவா்களில் உள்ள கல்வெட்டுகள் பழைமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மேல்தளங்களில் கோயிலின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களும் வரைப்பட்டு அழகாக மிளிா்கின்றன.
ஏப்ரல் 29-ம் தேதி, உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசின் கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து, பக்தா்கள் பங்கேற்பின்றி, தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.